பாகிஸ்தானை மிரட்டும் கனமழை – 37 பேர் பலி!
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி 48 மணி நேரத்தில் மழை- நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்ததாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரணம் வழங்கப்படும் என்று மாகாண முதல்வர் கே.பி.கே. அலி அமீன் கந்தாபூர் தெரிவித்தார்.
தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களாக குவாடரில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தள்ளனர். வெள்ள நீர் புகுந்ததால், பல குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. மழை தொடர்பான விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.