மொசாம்பிக்கில் படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி

மத்திய மொசாம்பிக்கில் (Mozambique) உள்ள பெய்ரா (Beira) துறைமுகக் கடற்கரையில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்.
கடலில் நங்கூரமிடப்பட்ட ஒரு கப்பலுக்கு பணியாளர்களை மாற்றும் வழக்கமான நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக சில இந்தியர்கள் இறந்துவிட்டனர், மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக மொசாம்பிக்கில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பெய்ரா துறைமுகத்தில் நடந்த படகு விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிர் பிழைத்தவர்கள் தற்போது பெய்ராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.