நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் தற்போது நெருக்கடியானநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருகைதந்து, அவரின் அனுபவத்தை நாட்டுக்காக வழங்குவது நல்லது.
அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும்.
அதேபோல அனைத்து கட்சிகளுடன் சந்திரிக்கா அம்மையாருக்கு chandrika bandaranaike kumaratunga தொடர்பு உள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரணிகளை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியில் இறங்க வேண்டும்.
எதிரணிகள் ஒன்றிணையும்பட்சத்தில் மாகாணசபைத் தேர்தலை வெற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. அரசியல் பயணம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.” – என்றார்.
மீண்டும் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் ரணில் தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், சிலிண்டர் கூட்டணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக நாடாளுமன்றம் சென்ற இருவரில் ஒருவர் பதவி விலகினால் ரணிலுக்கு நாடாளுமன்றம் செல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது.
சிலிண்டர் கூட்டணி சார்பில் பைசர் முஸ்தப்பா Faiser Musthapha, ரவி கருணாநாயக்க Ravi Karunanayake ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக தெரிவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.




