தங்கள் அன்பிற்கினியவர்களின் அஸ்தியை சுவிசுக்கு அனுப்பி வைக்கும் ஜேர்மானியர்கள் -வெளிவந்த பிண்னனி
ஜேர்மானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் அஸ்தியை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பும் நடைமுறை அதிகரித்துவருகிறதாம்.
ஜேர்மனியில் இறந்தவர்களைப் புதைப்பது, அல்லது இறந்தவர்களின் அஸ்தியைப் புதைப்பது, கரைப்பது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளில், கல்லறைகள் தவிர்த்து வேறெங்கும் இறந்தவர்களின் உடல்களையோ அல்லது அஸ்தியையோ புதைக்கவோ கரைக்கவோ அனுமதி இல்லை.
உண்மையில், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அது இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டுவருவதால், தங்கள் அன்பிற்குரியவர்களின் உடல் அல்லது அஸ்தியை ஜேர்மானியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் அல்லது தாங்கள் விரும்பிய இடத்தில் புதைக்க முடியாது.
சுவிட்சர்லாந்தில் இறுதிச்சடங்குகள் தொடர்பில் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. ஆகவே, ஜேர்மானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் அஸ்தியை சுவிட்சர்லாந்துக்கு அனுப்புகிறார்களாம்.ஜேர்மன் இறுதிச்சடங்கு மையங்கள் சுவிஸ் இறுதிச்சடங்கு மையங்களுக்கு அஸ்திக்கலசங்களை அனுப்பிவைக்க, அங்கு செல்லும் ஜேர்மானியர்கள் அந்த அஸ்திக்கலசங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த இடங்களில் புதைக்கவோ, அல்லது கரைக்கவோ செய்கிறார்கள்.
இது இப்படியிருக்க, இன்னொருபக்கம், சுவிட்சர்லாந்தில் சில இடங்களில் இப்படி ஜேர்மானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் அஸ்தியை கரைப்பதற்கு எதிர்ப்பும் உருவாகியுள்ளது.சுவிஸ் மக்கள் குடிக்கும் நீரில் ஜேர்மானியர்கள் இறந்தவர்களின் அஸ்தியை கரைப்பதாக புகார் கூட எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.