“டித்வா” புயல் நிவாரண நிதிக்கு பொகவந்தலாவை கொட்டியகல மக்கள் நன்கொடை வழங்கிவைப்பு
நாட்டை உலுக்கிய ‘டித்வா’ சூறாவளி தாக்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பொகவந்தலாவை கொட்டியகல தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தினசரி ஊதியம் பெறும் 1,350 தோட்டத் தொழிலாளர்கள், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்து, இளைஞர் சமூகத்தின் பங்களிப்புடன் திரட்டப்பட்ட ரூ. 1,08,000 நிதியினை அரசாங்கத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
இலங்கை வங்கியின் பேரிடர் நிவாரணக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொட்டியகல தோட்டத்தில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மஞ்சுள சுரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு மக்களிடம் உத்தியோகபூர்வமாக இத்தகவலைப் பகிர்ந்து கொண்டனர்.
தமது வாழ்வாதாரமே சவாலுக்குள்ளாகியுள்ள நிலையில், பிறர் துயர் துடைக்க முன்வந்த இந்த பெருந்தோட்ட மக்களின் அர்ப்பணிப்பை மக்கள் பிரதிநிதிகள் வெகுவாகப் பாராட்டினர்.





