ஜனாதிபதியின் அதிரடி வர்த்தமானி: மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட முக்கிய சேவைகள் அத்தியாவசியமாகப் பிரகடனம்
இலங்கையின் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்துப் பணிகள், எரிபொருள் மற்றும் பெற்றோலியப் பொருட்கள், எரிவாயு விநியோகம் மற்றும் நீர் வழங்கல் சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இத்துறைகளில் எவ்விதத் தடையுமின்றி சேவைகள் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, சுகாதாரத் துறையின்கீழ் வரும் அனைத்து அரச மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் சேவைகள், நோயாளர் காவு வண்டிச் சேவைகள் ஆகியவற்றுடன், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இந்தப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.
மேலும், நாடு முழுவதும் உள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகள் வழங்கும் சேவைகள், இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகளும் அத்தியாவசியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் கழிவு அகற்றும் முறைமை, தீயணைப்பு மற்றும் குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படைச் சேவைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





