ரஷ்ய தொழிலதிபர் கான்ஸ்டான்டினை கொல்ல முயற்சி!
ரஷ்ய தொழிலதிபர் கான்ஸ்டான்டின் மலோஃபீவை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலை முயற்சியை எஃப்.எஸ்.பி பாதுகாப்பு சேவை தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொழிலதிபரான கான்ஸ்டான்டினுடைய காரின் அடிபாகத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கொலை முயற்சி ரஷ்ய தீவிர வலதுசாரி ஆர்வலரான டெனிஸ் கபுஸ்டினுடைய ஏற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த கொலை முயற்சிக்கு பின்னால் உக்ரேனிய பாதுகாப்பு சேவைகள் இருக்கலாம் எனவும் எஃப்.எஸ்.பி குற்றம் சாட்டியுள்ளது.
கபுஸ்டின் மீது பயங்கரவாத குற்றங்கள் மற்றும் சட்டவிரோதமாக வெடிமருந்து கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக கிரிமினல் வழக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையத்தின் மீது கபுஸ்டின் ஒரு நாசகார தாக்குதலை நடத்த முயற்சித்ததையும் எஃப்.எஸ்.பி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை தொழிலதிபர் கான்ஸ்டான்டின் மலோஃபீ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆதரவாளர் ஆவார். உக்ரைன் மீது ரஷ்ய தொடுத்துள்ள போரை வலுவாக ஆதரித்து வருகிறார்.