சர்வதேச நாணய நிதிய உதவியைத் தொடர்ந்து 7 பில்லியன் டொலர் நிதி உட்பாய்ச்சல் – இலங்கை நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கடன்வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம் உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் இலங்கையால் பூர்த்திசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டம் நாளை மறுதினம் (20) சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்வுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியதன் பின்னர் அடுத்துவரும் 4 வருடகாலத்தில் 2.9 பில்லியன் டொலர் நிதி இலங்கைக்குக் கட்டம்கட்டமாக வழங்கப்படும்.
இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் உதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கி 48 மாதங்களுக்குள் இருதரப்பு மற்றும் பல்தரப்பு நிதியியல் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கை சுமார் 7 பில்லியன் டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ளும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.