ஆன்மிகம்

கோபுர தரிசனம்-கோடி புண்ணியம்

கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் ஆலயம்

கோபுர தரிசனம் – கோடி புண்ணியம்

கோபுர தரிசனம் – பாவ விமோசனம்

மன்னீஸ்வரர்

மூலவர்:மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்)

உற்சவர்:சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார்:அருந்தவச்செல்வி

தல விருட்சம்:வன்னி

ஆகமம்/பூஜை:காரணாகமம்

பழமை:500 வருடங்களுக்குள்

புராண பெயர்:மன்னியூர்

ஊர்:அன்னூர்

மாவட்டம்:கோயம்புத்தூர்

மாநிலம்:தமிழ்நாடு

திருவிழா

மார்கழியில் பிரம்மோற்ஸவம்,சித்திரைப் பிறப்பு, வைகாசி பூஜை, மகா சிவராத்திரி.

தல சிறப்பு

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய சிவாலயம்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி

நிர்வாக அதிகாரி, மன்னீஸ்வரர் திருக்கோயில், அன்னூர் – 641 653.கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்

+91- 4254 – 262 450, 98422 – 38564.

பொது தகவல்

மேற்கு நோக்கிய தலம், மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நால்வர், திருநீலகண்ட நாயனார் சன்னதிகள் உள்ளது.

தலவிருட்சம் வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னதியில் 7 நாகங்கள் உள்ளன. இங்கு வேண்டிக் கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை

முன்வினைப்பாவம் நீங்க, தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்

சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

தலபெருமை

இறகு லிங்கம்

மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். ராஜகோபுரம் ஏழுநிலை கொண்டதாக அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கம் மணலின் நிறத்திலேயே இருக்கிறது. லிங்கத்தின் இருபுறமும் பறவைக்கு இருப்பது போல, இறகு போன்ற வடிவம் இருக்கிறது. உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைளை மடக்கி வைத்து அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கிறது.

கருடன் கூர்மையான பார்வை கொண்டது. வானத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது. அதுபோல, சிவனும் யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யக்கூடிய தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. பாவங்களை உணர்ந்து திருந்தி, இனியும் பாவம் செய்ய மாட்டேன் என இவரது சன்னதியில் உறுதி எடுத்துக் கொண்டால், இதுவரை செய்த பாவங்களை மன்னித்து விடுவார் என்பது நம்பிக்கை. லிங்கத்தின் மேற்பகுதியில் சங்கிலியால் கட்டி இழுத்த தடமும், உச்சியில் வேடனது கோடரியால் வெட்டுப்பட்ட இடம் மழுங்கியும் இருக்கிறது.

அம்பாள் எதிரே விநாயகர்

அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்த சிவன் என்பதால் இவர், “அன்னீஸ்வரர்’ என்றும், பாவச்செயலை செய்த அவனை மன்னித்ததால், “மன்னீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார். தலமும் “மன்னியூர்’ எனப்பட்டது.

அமாவாசைகளில் சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அம்பாள் அருந்தவச்செல்வி என்ற பெயரில் அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. இப்பூஜையின்போது அம்பாளை தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. கோயில்களில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பாள்.

இங்கு அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பது வித்தியாசமானதாகும். இவளது சன்னதி எதிரில் விநாயகர் இருக்கிறார். இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

சூரிய, சந்திர பூஜை

கல்வெட்டுக்களில் இவ்வூர் “மேற்றலைத்தஞ்சாவூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளது. தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கும், திங்கள்கிழமையில் சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சூரியனைப் பார்த்தபடி இருக்கிறது. சனீஸ்வரன் தனிச் சன்னதியில் இருக்கிறார். சனிக்கிழமைகளில் காலையில் இவருக்கு எள் சாதம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

தல வரலாறு

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வள்ளிச்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற சிவபக்தன், இங்கு வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாது என்பதால், வேட்டையாடி வந்தான்.

ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை. பசியின் காரணமாக, வள்ளிக்கிழங்கை கோடரியால் வெட்டி சாப்பிட்டான். கிழங்கை வெட்டிய பிறகும், அது அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. ஆச்சரியத்துடன், மேலும் கிழங்கை வெட்டவெட்ட கிழங்கின் நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறிந்துகொள்ள கூடுதல் ஆழத்திற்கு வெட்டினான். அப்போது கிழங்கில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த வேடனிடம் அசரீரியாக ஒலித்த குரல், ” இனி உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாமல் இரு.

இதுவரையில் நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது” என்றது. வேடன் மன்னனிடம் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்தான். இங்கு வந்த மன்னன் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் தோண்டியபோது, மண்ணிற்கு அடியில் ஒரு லிங்கத்தைக் கண்டான். லிங்கத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்தான். முடியவில்லை. எனவே, லிங்கத்தின் மீது சங்கிலியைக் கட்டி, யானையைக் கொண்டு இழுத்துப் பார்த்தான். ஆனால், லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், “தான் இவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புவதாகவும், அதனால் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டாம்,” எனவும் கூறினார். எனவே, மன்னன் லிங்கம் இருந்த இடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டான்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்

கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் ரோட்டில் 32 கி.மீ., தூரத்தில் அன்னூர் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

தங்கும் வசதி

கோயம்புத்தூர்

கோபுர தரிசனம் நாளையும் தொடரும்…

வாழ்க வளமுடன்

வாழ்க வையகம்

(Visited 45 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென