மீண்டும் தைவானை சீனாவுடன் இணைப்போம் – பைடனுக்கு அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை!
தைவானை சீனாவின் பிரதான நிலப்பரப்புடன் மீண்டும் இணைப்போம் என அமெரிக்க் அதிபர் ஜோ பைடனுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுயாட்சி பெற்ற நாடாக தைவான் தன்னை அறிவித்துக் கொண்டாலும்கூட, சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தைவான் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அமெரிக்காவும் தைவானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
இந்த சூழலில், தைவானில் சீனா தனது உரிமையை நிலைநாட்ட அந்நாட்டின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில்தான் தைவானை சீனாவின் பிரதான நிலப்பரப்புடன் பீஜிங் மீண்டும் இணைக்கும் என ஜோ பைடனுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜி ஜின்பிங் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டு ஆதரவுடன் தைவான் தனது சுதந்திரத்தை அறிவித்தால், சீனா ராணுவ ரீதியாக தாக்கும். வெளிநாட்டு சக்திகள் மற்றும் சில பிரிவினைவாதிகளின் தலையீட்டில் மட்டுமே தைவான் செயல்பட்டு வருகிறது. தைவானை சீனா உடன் இணைப்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது என ஜோ பைடன் அறிக்கையை வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.