இதிகாசமும் அறிவியலும் கலந்த கல்கி 2898 AD.. முழு விமர்சனம்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல், தீபிகா படுகோன் கூட்டணியில் கல்கி 2898 AD உருவாகி இருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை காட்டியிருக்கும் இதன் கதைகளம் ஆடியன்ஸை பிரம்மிக்க வைத்துள்ளது. அதன்படி மகாபாரத குருசேத்திர போரில் கௌரவர்களுக்கு துணையாக போரிடுகிறார் அஸ்வத்தாமா. அவரால் பாண்டவர்கின் வாரிசு குழந்தை கருவிலேயே இறக்கிறது.
இதனால் கோபமான கிருஷ்ணர் அவருக்கு சாகா வரத்தை கொடுத்ததோடு கலியுகத்தில் மீண்டும் நான் அவதரிக்கும் போது என்னை காப்பாற்றினால் உன் சாபம் நீங்கும் என சொல்கிறார். அதன் பிறகு 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கதை தொடங்குகிறது.
அப்போது முதலும் கடைசியுமாக இருக்கிறது காசி. அந்த நகரத்தை ஆள்பவர் தான் சுப்ரீம் யாஸ்கின் என்ற கமல். அவருடைய கொடுமையான ஆட்சியின் கீழ் எஞ்சி இருக்கும் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதில் பசி பட்டினியோடு அடிமைகளாக வாழும் மக்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர்.
மற்றொரு பக்கம் காம்ப்ளக்ஸ் என்ற ஒரு ஆடம்பர உலகத்தை உருவாக்கி அதில் அதிகார வர்க்கத்தினர் வாழ்கின்றனர். அங்கு எப்படியாவது நுழைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சில திருட்டு வேலைகளை செய்கிறார் நாயகன் பிரபாஸ்.
இது இப்படி இருக்க தீபிகா படுகோன் வயிற்றில் வளரும் குழந்தையை (கல்கி) காப்பாற்ற போராடுகிறார் அஸ்வத்தாமா என்னும் அமிதாப்பச்சன். ஆனால் தீபிகாவை கமலிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என இறங்குகிறார் பிரபாஸ். அந்த குழந்தையை அழிக்க ப்ராஜெக்ட் கே என்ற திட்டத்தை உருவாக்குகிறார் கமல்.
இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? அமிதாப்பச்சன் குழந்தையை காப்பாற்றினாரா? பிரபாஸ் தான் விரும்பிய ஆடம்பர வாழ்க்கையை அடைந்தாரா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது கல்கி.
இதிகாசமும் அறிவியலும் கலந்த இப்படம் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நான்கு வருட காலம் கடுமையாக உழைத்த நாக் அஸ்வினின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு பிரம்மாண்டம் திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டி கிடக்கிறது.
அதேபோல் நிறைய சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் இருக்கிறது. அதில் விஜய் தேவரகொண்டாவின் கேமியோ வேற லெவலில் உள்ளது. டெக்னாலஜியை பொருத்தவரையில் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு இது புதுவிதமான அனுபவத்தையும் சுவாரசியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கதாபாத்திரங்களின் அழுத்தம் கொஞ்சம் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. மேலும் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருப்பதும் கொஞ்சம் சோர்வடைய வைத்துள்ளது. இதில் அமிதாப்பச்சன் தான் அதிக ஸ்கோர் செய்கிறார். அவருடைய நடிப்பும் தோற்றமும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி விடுகிறது.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டே காட்சிகளில் வந்தாலும் கமல் கண்பார்வையிலேயே அனைவரையும் கட்டி போட்டு விடுகிறார். அவருடைய தோற்றமும் வசன உச்சரிப்பும் கண் இமைக்க மறந்து நம்மை பார்க்க வைக்கிறது.
அந்த அளவுக்கு வலுவான கதாபாத்திரமாக இருக்கிறது. அதிலிருந்து இரண்டாவது பாகத்திற்கான லீடையும் கொடுத்துள்ளனர். கல்கியை சுமக்கும் பெண்ணாக வரும் தீபிகா படுகோனும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இப்படி பல சுவாரசியங்கள் நிறைந்த படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை அடுத்த ஹீரோ என்றே சொல்லலாம்.
காட்சிக்கு காட்சி மிரட்டும் அவருடைய பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இப்படியாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தரமான தொழில்நுட்பத்துடன் கொடுத்த பில்டப்புக்கு நியாயம் சேர்த்துள்ளார் இயக்குனர். அதனால் இந்த கல்கியை தாராளமாக தியேட்டர்களில் கண்டு ரசிக்கலாம்.
நன்றி – சினிமா பேட்டை