இலங்கையில் பாதியில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!
வெளிநாட்டு உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ‘கட்டுமானத் தொழில் புத்துயிர் தொடர்பான செயற்குழு’ நேற்று (03.08) கூடிய நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட டஅவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டத்தின் வெற்றியினால் அந்த செயற்பாடுகளை மும்முரமாக செயற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டடம் கட்டுபவர்களுக்கு அரசினால் செலுத்தப்பட வேண்டிய மூன்று மாத கால நிலுவை பில்கள் இம்மாதத்திற்குள் தீர்க்கப்படும் என கட்டுமானத் தொழில் மறுமலர்ச்சி செயற்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிடப்படுகிறது.