வரும் வாரத்தில் கூடவுள்ள இலங்கை நாடாளுமன்றம் : விவாதத்திற்கு வரும் முக்கிய சட்டமூலங்கள்!
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியவையே இவ்வாறு விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் மாதத்தின் முதல் நாடாளுமன்ற வாரம் நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதஜ வரை நடைபெற உள்ளது. கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் அந்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 07ஆம் திகதி காலை 09.30 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அங்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
நவம்பர் 08 அன்று, சிவில் நடைமுறைச் சட்ட திருத்த மசோதா மற்றும் நீதிமன்றம், நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனத்தை அவமதிக்கும் மசோதா ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான உத்தரவுகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் மீதான விவாதத்தை நவம்பர் 9ஆம் திகதி நடத்த நாடாளுமன்ற விவகாரக் குழு தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்ற வாரத்தின் இறுதி நாளான 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நடத்துவது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுவின் விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 06 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.