சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன – மஸ்கின் அறிவிப்பால் அதிர்ச்சி
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என எக்ஸ் நிறுவன உரிமையாளரும், மிகப்பெரிய தொழிலதிபருமான எலான் மஸ்க், ஆரூடம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டியே எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருந்தார்.
மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவுக்கு கருத்தளிக்கும் விதமாக எலான் மஸ்க் இந்த கருத்தைப் பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்க் கூறியிருக்கும் தகவல், உலகின் மேம்பட்ட சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலைப் பற்றியதாகவே உள்ளது.
கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0.97 ஆகக் குறைந்துள்ளது. இதுவே 1.0க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும். அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது.
இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் அதிகம் இருப்பர், தொழிலாளர் குறைவாகும், மனித வளம் குறைந்துவிடும். இதனால் தொழிற்சாலை முதல் உணவு விநியோகம் வரை அனைத்தும் பாதிக்கும் என்று மரியோ நாவ்பால் பதிவிட்டிருந்தார்.