பொழுதுபோக்கு

“எல்லா புகழும் அமரனுக்கே…” அமரன் குழுவை பாராட்டி கமல்ஹாசன் எழுதிய மடல்…

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் நேற்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அமரன்.

படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படம் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வரும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரும் இந்திய சினிமாவின் அடையாளமாகவும் உள்ள கமல்ஹாசன் படக்குழுவினரைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

“உயிரே உறவே தமிழே, திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்த போது “சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும்; சில வேலைகள் கௌரவத்தையும்,பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்” என்று சொன்னேன்.

1000 நாட்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது.

மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தத் தேசத்திற்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் எய்தியவர். அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர், உயிர் நட்பைப் பறிகொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை.

மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும், அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கைதான் அமரன். இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும்தான்.

ஒரு நிஜமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டப் போகிறோம் என்பதை உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் தம்பி சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.

இந்தப் படத்திற்கான அவரது முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்குப் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.மேஜர் முகுந்த் வரதராஜனின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்தத் தேசமே போற்றிய இரும்புப் பெண்மணி.

அத்தனை இழப்புகளுக்கும் மத்தியில் நானொரு ராணுவ வீரனின் மனைவி எனும் பெருமிதத்தைத் தன் அடையாளமாக அணிந்து கொண்ட வீரமங்கை, அவரது பாத்திரமாகவே மாறி இருக்கிறார் சாய்பல்லவி. அவர் கதாநாயகியாக அமைந்தது இந்தப் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

தனது இசையினால் இந்தப் படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் தம்பி ஜி.வி. பிரகாஷ். தனது முதல் படத்துக்குக் காட்டிய அக்கறையை, உழைப்பை ஒவ்வொரு படத்துக்கும் கடைபிடிக்கிறார். என்னுடைய இளவல் ராஜ்குமார் பெரியசாமியின் திறமையை நான் ஏற்கனவே நன்கு அறிந்ததன் விளைவுதான் அமரன்.

ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை திரைப்படமாக எடுப்பது எளிதான காரியம் அல்ல. விரிவான ஆய்வுகள், களப்பணிகள் செய்து, தரவுகளைத் திரட்டி அவற்றைத் தொகுத்து சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. படப்பிடிப்பு நடத்த சவாலான நிலப்பகுதிகளில், எண்ணற்ற தடைகளை மீறி தன் நெஞ்சில் சுமந்த அமரன் எனும் அனலை மேஜர் முகுந்த் வரதராஜனுக்கான ஒரு சுடராக ஏற்றி இருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமியின் தீவிரமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியவை. ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக்கனவு அல்ல. இயக்குனர், கதாநாயகன், தயாரிப்பாளர் தொடங்கி மொத்த அணியுமே நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய சாய், எடிட்டர் கலை உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் அர்ப்பணிப்புடன் உழைத்து அமரன் எனும் பொதுக்கனவைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

இந்தியா பண்டிகைகளின் தேசம். நாம் குடும்பத்துடன் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும்போது எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்து நிற்கும் நமது ராணுவ வீரர்களையும், நமது அன்றாட வாழ்க்கை சீராக இயங்கக் காரணமாக இருக்கும் மக்கள் பணியாளர்களையும், அல்லும் பகலும் உழைக்கும் முன்களப் பணியாளர்களையும் நன்றியோடு நினைத்துக்கொள்ள வேண்டும். அவர்களது வீரத்தையும், தியாகத்தையும், பங்களிப்பையும் போற்ற இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாமறியாத ராணுவ வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும், எனது சகோதரர் ஆர்.மகேந்திரனும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தக் கடிதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்