இடித்து அழிக்கப்பட்டது நாகர்ஜுனாவின் மண்டபம்… பெரும் பரபரப்பான சம்பவம்
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது சினிமா உலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.
இந்த மண்டபம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக நாகர்ஜுனா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் ஒரு அங்குலம் நிலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து தம்மிடி குந்தா ஏரி சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பலர்மனு அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்தனர்.
இதன்படி காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன், ஜேசிபி இயரங்களுடன் வந்த அதிகாரிகள் நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். மேலும் இந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் மூடினர்.
நாகர்ஜுனாவின் என் கன்வென்ஷன் மண்டபமானது அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. இதனுள் மொத்தம் மூன்று கல்யாண மண்டபங்களும் அதற்கு ஏற்ற பார்க்கிங் ஏரியாவும் இருந்தது. இந்த கட்டிடத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள் மட்டும் இல்லாமல் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளும் நடந்துவந்துள்ளது.
இவை அனைத்தும் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீட்டு விஷேசங்கள் நடைபெற்று வந்தது.
தனக்குச் சொந்தமான கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது என நடிகர் நாகர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதில், என் கன்வென்ஷன் கட்டிடம் முழுவதுமே எனது சொந்த நிலத்தில் கட்டப்பட்டது. அது எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் இடிக்கப்பட்டது வேதனை அளிக்கின்றது. அதில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் கிடையாது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பில் நான் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டிடம் கட்டியிருக்கின்றேன் என குறிப்பிட்டிருந்தால், நானே முன் நின்று கட்டிடத்தை இடித்திருப்பேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் தக்க இழப்பீடு கோருவேன்” என குறிப்பிட்டுள்ளார்.