இந்தியன் 2 நான்காம் நாள் வசூல் இவ்வளவுதானா? எல்லாம் போச்சா?
இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. எனவே அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் சுமாரான வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியன் 2வின் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவது ஷங்கரின் மேக்கிங்கும், எடுபடாத வசனங்களும்தான். ஏனெனில் படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் பெரும் பங்காற்றியது.
சிறு சிறு வசனங்களில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை நீக்க முடியாதது. ஆனால் இந்தியன் 2வில் அப்படி ஒரு வசனம்கூட இல்லை. அதேபோல் மக்கள் கூட்டத்தை கூட்டி ஒரு காட்சியை எடுத்தால் போதும் பிரமாண்டமாகிவிடும் என்று ஷங்கர் நினைத்துவிட்டார்போல; திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் சுவாரசியமே இல்லை என்பதும் பலரின் விமர்சனமாக இருக்கிறது.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக இந்தியன் 2 இருந்தது. மேக்கிங்கோ, வசனமோ, இசையோ எதுவுமே ஈர்க்கவில்லை. இந்தியன் எப்படிப்பட்ட படம்; அதற்கு இரண்டாவது பாகம் எடுக்கிறேன் என்கிற பெயரில் எதையோ எடுத்து வைத்திருக்கிறார்களே என்று ஓபனாகவே ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக படக்குழு பெரும் அப்செட் ஆனது. மேலும் படத்தை எபப்டியாவது தப்பிக்க வைக்க வேண்டுமென்பதற்காக 20 நிமிடங்கள் ட்ரிம்மும் செய்யப்பட்டது. மேற்கொண்டு 15 நிமிடங்களும் ட்ரிம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படம் வெளியான முதல் நாளில் 25 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 18 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 15 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக கூறப்பட்டது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறைந்துகொண்டே சென்ற நிலையில் நான்காவது நாளான நேற்றைய வசூல் மொத்தமாக படுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று இந்தியாவில் வெறும் 5 கோடி ரூபாய் வரை தான் படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே படத்துக்கு தொடர்ந்து அடி விழுந்துவருவதால் ஆகஸ்ட் மாதமே ஓடிடியில் இந்தியன் 2வை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.