ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’… கைக்கோக்கும் ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்
ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கர் வென்ற ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மருடன் கைக்கோத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்கும் இதன் படப்பிடிப்பு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமாயணம் கதையை தழுவி ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடித்த படம் படுதோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இதே ராமாயணம் மீண்டும் படமாகிறது. ராமனாக ரன்பீர் நடிக்க, சீதையாக சாய்பல்லவி நடிக்கிறார். ஹனுமனாக சன்னி தியோலும், ராவணனாக யஷூம் நடிக்கின்றனர்.
நிதிஷ் திவாரி இயக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஆஸ்கர் நாயகர்கள் இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் பிரபல ஜெர்மானிய இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் ஆகியோர் ஒன்றிணைகின்றனர்.
இந்தப் படம் மூலம் இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார் ஹன்ஸ். ‘லயன் கிங்’, ‘இன்டெர்ஸ்டெல்லர்’,’மேன் ஆப் ஸ்டீல்’,’இன்செப்சன்’ போன்ற பல ஹிட் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாம் கட்ட நடிகர்களுடன் தொடங்கி இருக்கிறது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அயோத்தி செட் வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ராம நவமியான ஏப்ரல் 17 அன்று பூஜையுடன் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்பை படக்குழு வெளியிட இருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.