மின் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார்.
அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், 31 முதல் 60 அலகு வரையான மின் பாவனையாளர்களுக்கு 28 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
மேலும், 60 முதல் 90 அலகு வரையிலான மின் பாவனையாளர்களுக்கு 30 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
அதேபோல், 90 முதல் 180 வரையிலான பாவனையாளர்களுக்கு 24 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ள நிலையில், மத ஸ்தானங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 33 சதவீதத்தாலும்,
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு 18 சதவீதத்தாலும் மற்றும்
பொது நோக்கத்திற்கான மின் பாவனைக்கு 23 சதவீதத்தாலும் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.
மேலும், அரசாங்க பிரிவினருக்கான மின் கட்டணம் 22 சதவீதமும் வீதி விளக்குகளுக்கான மின் கட்டணத்தை 20 சதவீதமும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டண திருத்தத்தின்படி அனைத்து நுகர்வோர் பிரிவினருக்கும் அதிகபட்ச நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டுத் துறையில் 30 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 33 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.