மொரவெவ பிரதேச சபைக்கு கள விஜயத்தை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்!
திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கு உடபட்ட பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக இன்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர கள விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இதன் முதற்கட்டமாக மொரவெவ பிரதேச சபையின் வருமானம் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் அந்த வருமானத்தை அதிகரிப்பது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் பல்வேறுபட்ட திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சென்றிருந்தபோது அங்கு சிறு சிறு குறைபாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் அதனை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்வி மற்றும் சுகாதார விடையங்களில் அரசியல் தலைவீடு இல்லாமல் சேவைகளை வழங்க உள்ளதாகவும் இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக முதல் கட்டமாக 2500 பேரை நியமிப்பதற்கு அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை எதிர்காலங்களில் நியமனங்கள் வழங்கும் போது நியமனம் பெற்ற காலப்பகுதியில் இருந்து ஐந்து வருடத்திற்கு எந்த ஒரு இடங்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது எனவும் அது விடயத்தில் கரிசனையாக இருப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயத்தின் போது திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குமார் விக்ரமசிங்க மற்றும் வீ.பிரேமானந் மற்றும் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் கே.தனுஸ்க உட்பட சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




