அமெரிக்க அதிபர் தேர்தல்: தன் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதிபர் புதின்
அமெரிக்காவில் வரும் நவம்பர் இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை ரஷ்ய அதிபர் புதின் கூறியிருக்கிறார்.
விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகத் தெரிவித்தார். மேலும், கமலா ஹாரிஸின் சிரிப்பு அழகாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் புதின் ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பது இது முதல்முறை இல்லை. முன்னதாக அவர் ஜோ பைடனை ஆதரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிவிட்ட நிலையில், அடுத்து யாருக்கு ஆதரவு என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த புதின், “பைடன் அதிக அனுபவம் வாய்ந்த நபர்.. பழங்காலத்து அரசியல்வாதி. அவர் தனக்குப் பிறகு கமலா ஹாரிஸை ஆதரித்து இருக்கிறார். எனவே, அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். கமலா ஹாரிஸின் சிரிப்பு கூட அழகாகவே இருக்கிறது. இதுவரை கமலா ஹாரிஸுக்கு எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டு இருக்கிறது.
நான் என்ன சொன்னாலும், கடைசியில் இறுதி தேர்வைச் செய்யப் போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான். அமெரிக்க மக்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும். கமலா ஹாரிஸ் ஒரு பாசிட்டிவான தலைவர். அவர் பேச்சுவார்த்தையை விரும்புவார். ரஷ்யா மீது தேவையில்லாத பொருளாதாரத் தடைகளை விதிக்க மாட்டார். அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த தலைவரையும் விட டிரம்ப் தான் அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்” என்றார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் எந்தளவுக்கு மோதல் போக்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில் புதின் இதுபோல பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்மறையாக எதிரொலிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே புதினின் கருத்துக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதையும் தேர்தல் குறித்துப் பேசுவதையும் புதின் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அமெரிக்க மக்கள் மட்டுமே.. புதின் எங்கள் தேர்தல் குறித்துப் பேசத் தேவையில்லை.. அதில் தலையிடும் முயற்சியையும் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.