சகாரா பாலைவனத்தில் வெள்ளம் – பல தசாப்தங்களுக்கு பிறகு நிரம்பிய ஏரி!

சகாரா பாலைவனம் என்றாலே எங்கும் மணல் பரப்பும் சுட்டெரிக்கும் வெப்பமும்தான் நினைவுக்கு வரும்.ஆனால், கடந்த மாதம் இரு நாள்களுக்குப் பெய்த கனமழையை அடுத்து சகாரா பாலைவனத்தின் ஒருசில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கனமழைப் பொழிவுக்குப் பிறகு, இதற்குமுன் 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ‘இரிக்கி’ ஏரி தற்போது நிரம்பிவிட்டதாக ‘ஏபி’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சராசரியாக ஓராண்டில் பொழியும் மழையைக் காட்டிலும் ஒருசில பகுதிகளில் அந்த இரண்டு நாள்களில் பெய்த மழை அதிகமாக இருந்ததாக மொரோக்கோ அரசாங்கம் தெரிவித்தது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ளநீர், தடாகங்களாகவும் குட்டைகளாகவும் உருவாகி உள்ளூர்வாசிகளின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துவிட்டன.
“இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இந்தளவுக்கு மழை பொழிந்து 30 முதல் 50 ஆண்டுகளாகிவிட்டன,” என்று மொரோக்கா வானிலை முன்னுரைப்பு வல்லுநர் ஒருவர் கூறினார்.
வட்டாரத்தின் பருவநிலையை வரும் ஆண்டுகளில் இந்தக் கனமழை பேரளவில் மாற்றக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆறு ஆண்டுகளாக மொரோக்கோ நாட்டை வாட்டி வதைத்த வறட்சிநிலையை அடுத்து பெய்த இந்த மழை பலருக்கும் வரமாக அமைந்துள்ளது.