‘நடிகர் சிவாஜி கணேசனின் வீடு ஜப்தி’-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் தன்னுடைய மனைவி அபிராமியை பங்குதாரர்களாக வைத்து ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அந்நிறுவனம் மூலம் ஜக ஜால கில்லாடி என்கிற படத்தை தயாரித்து. அப்படத்தில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர்.
இப்படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த கடனை 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக துஷ்யந்த் மற்றும் அவர் மனைவி அபிராமி இருவரும் உறுதி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்
ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமித்து, உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய ரவீந்திரன், கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக ஜக ஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக்கோரியபோது படம் முழுமை அடையவில்லை என தயாரிப்பு தரப்பு கூறிதால் சிவாஜி கணேசனின் வீட்டை ஏலத்தில் விடவும் ஜப்தி செய்யவும் தனபாக்கியம் நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை மார்ச் 5ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.