அறிவியலுக்கு முரணான கருத்துக்களை நம்ப வேண்டாம் : இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்!
அறிவியலுக்கு முரணான கருத்தாக்கங்களை விடுத்து, பிள்ளைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போட மறுத்த 9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கும் இன்று (06.01) நடைபெற்ற தடுப்பூசி நிகழ்ச்சியில் தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, “மூடநம்பிக்கைகள் மற்றும் மத நம்பிக்கைகளால், சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரிடையே இந்தத் தடுப்பூசிகளைப் பெறக்கூடாது என்ற கருத்து நீண்ட காலமாக உள்ளது.
கடந்த காலங்களில், அந்த மூடநம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினைகளால் தான் தட்டம்மை உள்ளது. சமூகத்தில் தடுப்பூசி போடப்படாத தட்டம்மை தடுப்பூசி வயதுடைய சுமார் 7,500 குழந்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறிய எண்ணிக்கை 22 மில்லியன் மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.