உலக மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு
உலக மக்கள்தொகை இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்கா மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உலக மக்கள்தொகை இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருக்கிறது. புத்தாண்டு தினத்தில் உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்திருக்கும். எனினும், நிகழாண்டு உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்பு மற்றும் 2 இறப்புகளை எதிா்பாா்க்கலாம்.
அமெரிக்காவின் மக்கள்தொகையைப் பொருத்தவரை, இந்த ஆண்டு 17 லட்சம் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அது 33.58 கோடியாக இருக்கும். அந்த நாட்டின் நிகழாண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் உலக சராசரியில் பாதியாக 0.53 சதவீதம் மட்டுமே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போக்கு நீடித்தால், 2020 முதல் 2030 வரையிலான 10 ஆண்டுகளே அமெரிக்க வரலாற்றில் குறைந்த மக்கள்தொகை வளா்ச்சி கொண்ட காலகட்டமாக இருக்கும். அதன்படி 2030-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், அமெரிக்காவின் மக்கள்தொகை வளா்ச்சி 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1960-2000 காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.