ஹிஜாப் அணியாமல் தொடரில் பங்கேற்ற ஈரானிய செஸ் வீராங்கனை: குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்
ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்ட ஈரானிய பெண்ணுக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கியுள்ளது.
கடந்த டிசம்பரில் கஜகஸ்தானில் நடைபெற்ற FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாரா காடெம் என்று அழைக்கப்படும் 26 வயதான சரசதத் கதேமல்ஷாரி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.இது ஈரானின் இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து அந்நாட்டு செஸ் கூட்டமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது.
மேலும் ஈரானிய அரசு சாரா காடெமை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஈரானுக்கு திரும்பி சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற நிலையில் சாரா காடெம் தன்னுடைய குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் ஜனவரியில் குடியேறினார்.
இந்நிலையில் சாரா காடெமிற்கு ஸ்பெயின் அதிகாரப்பூர்வ குடியுரிமை வழங்கப்படுவதாக புதன்கிழமை ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வ வர்த்தமானி அளித்த தகவலில், சாரா காடெமின் சிறப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு குடியுரிமை ஸ்பெயின் அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது என்று தெரிவித்துள்ளது.