பிணையில் வந்தகையோடு என்.பி.பி. அரசுக்கு அர்ச்சுனா சிவப்பு எச்சரிக்கை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் ஓராண்டுக்குள் கவிழும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Arjuna).
கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அர்ச்சுனாவுக்கு பிற்பகல் பிணை வழங்கப்பட்டது.
பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஏனைய சபைகளிலும் இந்நிலைமை ஏற்படலாம். முல்லைத்தீவிலும் என்.பி.பி. ஆட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனும் கப்பலில் தற்போது ஓட்டை விழ ஆரம்பித்துள்ளது. அந்த ஓட்டையை மூடுவதற்கு நாமும் முயற்சித்தோம். எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.
இன்னும் ஓராண்டில் அது (தேசிய மக்கள் சக்தி ஆட்சி) விழும்.
எனக்கு கொழும்பில் அரசியல் செய்யும் திட்டம் இல்லை. வடக்கு மக்கள் என்னை இங்கு அனுப்ப மாட்டார்கள்.
அதேவேளை, தையிட்டி விகாரையை இடிக்குமாறு நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி கூறுகின்றார். அவரின் அரசியலால் மக்கள் மத்தியில்தான் குழப்பம் ஏற்படப்போகின்றது.” – என்றார் அர்ச்சுனா எம்.பி.





