மேடையில் மயங்கி விழுந்த விஷால்

மதகஜராஜா பட விழாவுக்கு வந்தபோது விஷால் மைக்கை கூட கையில் பிடிக்க முடியாத அளவுக்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
பேசக்கூட முடியாமல் அவர் தடுமாறிய வீடியோக்கள் வைரலானது. அதன் பிறகு சில நாட்களிலேயே அவர் உடல் நலம் தேறி, நான் நன்றாக இருக்கிறேன் என பேட்டி கொடுத்தார்.
அதையடுத்து நேற்று இவர் பங்கேற்ற ஒரு விழாவின் மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
நேற்று திருநங்கைகளுக்கான அழகி போட்டியும் நடத்தப்பட்டது. அதில் கெஸ்ட் ஆக பங்கேற்றுள்ளார் விஷால். திருநங்கைகளுக்கு பரிசு கொடுத்து விழாவை உற்சாகப்படுத்தியது வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது.
ஆனால் மேடையில் விஷால் திருநங்கைகளுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார். இதனால் பதற்றமடைந்த திருநங்கைகள் அவரை அந்த மேடையிலேயே படுக்க வைத்துள்ளனர்.
அதன் பிறகு அங்கிருந்த மருத்துவ குழு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். 15 நிமிடங்கள் கழித்து தான் விஷால் கண் திறந்திருக்கிறார்.
அதன் பிறகு உடன் இருந்தவர்கள் அவரை கைத்தங்கலாக காரில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வீடியோ வெளியான நிலையில் மறுபடியும் விஷாலுக்கு என்னதான் ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் சரியாக சாப்பிடாதது மற்றும் கூட்டத்தின் காரணமாக அவர் மயங்கி விழுந்து விட்டார். இது சாதாரண மயக்கம் தான். இப்போது நலமாக இருக்கிறார் என விஷால் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.