இலங்கையை உலுக்கிய அறகலயவின் பின்னணியின் அமெரிக்க தூதுவர்: பகீர் குற்றச்சாட்டு முன்வைப்பு!
இலங்கையில் நடந்த “அறகலய”வுக்குரிய திரைக்கதை மற்றும் தயாரிப்பு என இரு பணிகளையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே முன்னெடுத்தார் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
“2022 அறகலயவின்போது திரைக்கதை மற்றும் தயாரிப்பு ஆகிய இரு பணிகளையும் அமெரிக்க தூதுவரே செய்திருந்தார்.
மிகவும் சூட்சுமமான முறையிலேயே இது நடந்துள்ளது. அமெரிக்க திரைக்கதை என தெரியாமல் எமது இளைஞர்கள் எமது நாட்டு தேசிய கொடியுடன் களமிறங்கும் நிலை காணப்பட்டது.
2024 இல் 3 சதவீத வாக்கு வங்கியுடன் இருந்த தேசிய மக்கள் சக்தியை ஆட்சியை பிடிக்கும் சக்தி என்ற நிலைக்கு விம்பம் ஏற்படுத்திய பிரதான சூத்திரதாரியும் அமெரிக்க தூதுவர்தான்.
ஜே.வி.பினரை தனது செல்லப்பிள்ளையாக மாற்றிக்கொண்டதுதான் தனது சேவைகாலத்தில் ஜுலி சங், பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். “ –என உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் கோட்டாபய ஆட்சியின்போது வெடித்த மக்கள் போராட்டமே அறகலய எனக் கூறப்படுகின்றது.
அக்காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக, ஜுலி சங் செயல்பட்டார். 4 வருடங்களுக்கு பிறகு தனது இராஜதந்திர சேவைகளை முடித்துக்கொண்டு அவர் நேற்று விடைபெற்றார்.





