கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்! பொலிஸார் தீவிர விசாரணை
மீகொட நாகஹவத்த பகுதியில் நேற்று (14) இரவு காரில் பயணித்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
ஒரு தாக்குதல்தாரி வாகனத்தை நிறுத்தியதாகவும் மற்றையவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகளும் வாகனத்தில் இருந்த போதிலும் அவர்கள் காயமின்றி இருந்தனர்.
இதேவேளை, நேற்று (14) பிற்பகல் மாளிகாகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அதே வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காண இரண்டு வழக்குகளிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.