ஏலத்துக்கு வந்த மாணவனின் வீடு… மீட்டுக் கொடுத்த சக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்!
கேரளாவில் உடன் பயிலும் சக மாணவரின் வீடு ஏலத்திற்கு வந்ததை அறிந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணம் திரட்டி வீட்டை மீட்டுக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரந்தாரப்பிள்ளி பகுதியில் சி.ஜே.எம்.ஏ என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் இதய நோயாளி ஆவார். பாட்டி வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்டு வீட்டில் உள்ளார். தந்தை மறைந்துவிட்ட நிலையில் படிப்பிற்கே மாணவர் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் பெயரில் வங்கியில் 2,59,728 ரூபாய் வங்கிக் கடன் பெற்றுள்ளனர். ஆனால் வருமானம் எதுவும் இல்லாததால் இதனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் டிசம்பர் 18ம் திகதி இந்த வீட்டை ஏலத்தில் விட இருப்பதாக வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த டிசம்பர் 13ம் திகதி பள்ளியில் உடன் பயிலும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. மாணவரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மாணவருக்கு உதவ, ஆசிரியர்களும், மாணவர்களும் முடிவு செய்தனர்.
இதன்படி பள்ளியில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் 15ம் திகதி வரை முடிந்த அளவிற்கு உதவிகளை செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து உடனடியாக மாணவர்கள் தங்களிடமிருந்த 100 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை அடுத்தடுத்து பணத்தை உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் 1.70 லட்சம் ரூபாய் பணம் திரண்டது. இருப்பினும் அந்த பணம் வீட்டை மீட்க போதுமானதாக இல்லை என்பதால் ஆசிரியர்கள் இணைந்து 1.28 லட்சம் ரூபாயை சேர்த்து மொத்தம் 2.98 லட்சம் ரூபாயை திரட்டினர்.
இதையடுத்து 2.59 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுக்காக செலுத்தப்பட்டு வீடு மீட்கப்பட்டது. மீதமிருந்த தொகை 6ம் வகுப்பு மாணவனின் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்காக களமிறங்கி சக மாணவர்களை ஒன்று திரட்டிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்ஞாலி மற்றும் சக ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.