சிங்கப்பூரில் வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்தியவருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் சட்டவிரோத முறையில் எல்லை தாண்டிய பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட S$1.3 மில்லியன் தொகையை அவர் சட்டவிரோத முறையில் பரிவர்த்தனை செய்துள்ளார்.
இந்நிலையில், 34 வயதான டு சாங்ஷூன் என்ற சீன நாட்டவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் S$6,160 அபராதமும் விதிக்கப்பட்டது.
அவர் சட்டவிரோத பரிவர்த்தனை சேவை மூலம் சம்பாதித்த பணம் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. அவரால் அபராதத்தை செலுத்த முடியாவிட்டால் மேலும் நான்கு வாரங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.
2021 நவம்பர் முதல், சிங்கப்பூரில் இருந்து சீனாவிற்கு பணம் அனுப்ப அவர் தனது சக ஊழியர்களுக்கு உதவியதாக கூறப்பட்டுள்ளது. அவர் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இரண்டு கட்டண திட்டங்களை அவர் வழங்கினார்.
அதாவது, S$1,000க்கும் குறைவான தொகைகளுக்கு பரிமாற்றக் கட்டணமாக S$5 வெள்ளியை பெற்றுள்ளார். மேலும், S$1,000 முதல் S$10,000 வரையிலான தொகைகளுக்கு S$10 வெள்ளியை பரிமாற்றக் கட்டணமாக பெற்றுள்ளார்.