பிரமாண்டமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை : பிரதமர் பெருமிதம்
அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை இன்று வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டபோது ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கடவுள் ராமர் நமக்கு ஆசிர்வாதம் அளிக்கிறார். இன்றைய நாள் வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். கால சக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம் எனறார்.