போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவினருடன் நெட்டன்யாகு மோதல்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தமது போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் பேராளர்களுடன் முட்டி மோதி வருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கின் தெற்கு காஸா பகுதியில் உள்ள பிலடல்ஃபி வழிப்பாதையை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அடம் பிடிப்பதாக பேச்சுவார்த்தை குறித்து அறிந்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், எகிப்து எல்லையில் உள்ள அந்த பிலடல்ஃபி வழிப்பாதை, மத்திய காஸா பகுதியில் உள்ள நெட்ஸரிம் வழிப்பாதை ஆகிய இரண்டுமே எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் சிக்கலான அம்சங்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிலடெல்ஃபி வழிப்பாதை ஹமாஸ் போராளிகளும் ஆயுதங்களும் எகிப்து எல்லை வழியாக கடத்த பயன்படும் என்பதால் நெட்டன்யாகு அதன் கட்டுப்பாட்டை இழக்கத் தயாராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் நெட்ஸரிம் வழிப்பாதை மூலம் ஹமாஸ் போராளிகளும் ஆயுதங்களும் தெற்கு காஸாவிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல உதவும் என்பதால் அந்த வழிப்பாதையிலும் இஸ்ரேல் சோதனைச் சாவடிகளை வைத்திருக்க வேண்டும் என நெட்டன்யாகு பிடிவாதமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நெட்டன்யாகுவின் குழு கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும் என நெருக்கி வந்தபோதும் அந்த இரு வழிப்பாதைகளையும் விட்டுத்தர நெட்டன்யாகு மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது