ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின் முதலாவது தேர்தலை சந்திக்கும் மியன்மார் – ஐ.நாவின் கோரிக்கை!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi) ஆட்சியை கவிழ்த்து இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மியன்மார் முதலாவது தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
மூன்று கட்டமாக வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 28 ஆம் திகதி காலை 06.00 மணிக்கும் ஆரம்பமாகும்.
இந்நிலையில் மியன்மாரில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தேர்தல்களை நடத்துவதில் வன்முறை, அடக்குமுறை மற்றும் மிரட்டல் தீவிரமடைந்து வருவதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான அல்லது அர்த்தமுள்ள பங்கேற்புக்கு இடமளிக்காத சூழலில் தேர்தல் நடைபெறுவதாக ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.
மியான்மரில் உள்ள இராணுவ அதிகாரிகள் மக்களை வாக்களிக்க கட்டாயப்படுத்த மிருகத்தனமான வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எந்தவொரு மாறுபட்ட கருத்துக்களையும் வெளிப்படுத்தியதற்காக மக்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை வாக்கெடுப்பை “குழப்பம்” செய்வதைத் தடைசெய்யும் கடுமையான புதிய சட்டங்களின் கீழ் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு 42 முதல் 49 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“தேர்தல் செயல்முறையை நாசப்படுத்த முயற்சித்ததாக” 140 வழக்குகளில் 201 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் உட்பட 229 பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் துன் துன் நவுங் (Tun Tun Naung) இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





