மெக்சிகோவில் மன உளைச்சலில் யானை – முதல் முறையாக நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மெக்சிகோவில் முதல் முறையாக யானை ஒன்றின் உடல்நலத்தைப் பார்த்துக்கொள்ளுமாறு விலங்கியல் தோட்டத்துக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ely என்ற ஆப்பிரிக்க யானைக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்க்கஸ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட Ely கடந்த 13 ஆண்டுகளாக San Juan de Aragon விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து வருகிறது.
Ely நீண்டகாலமாக மன உளைச்சலில் வாழ்ந்துவருவதாக வழக்கறிஞர்கள் கூறினர். அதனுடன் வசித்த Maggie என்ற யானை 2016இல் மடிந்த பிறகு Ely மனநலம் பாதிக்கப்பட்டதாக அவர்கள் வாதாடினர். அது உடலளவிலும் நோய்வாய்ப்பட்டது.
அவ்வப்போது வசிப்பிடத்திலுள்ள சுவரை மோதிக்கொள்ளும் Elyஇன் உடல் மெலியத் தொடங்கியது.
இதையடுத்து Elyஇன் வாழும் சூழலை மாற்றுவதற்கு விலங்கியல் தோட்டம் முயன்றது. ஆனால் அனைத்தும் பொதுமக்கள் கொடுத்த நெருக்குதலுக்குப் பிறகே செய்யப்பட்டதாக விலங்குநல ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.
2023இலும் 2024இலும் மேலும் 2 யானைகள் Elyஇன் வசிப்பிடத்தில் சேர்க்கப்பட்டன. இந்நிலையில் Elyஇன் உடல்நலத்தில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெக்சிகோவில் விலங்குகளுக்கும் உரிமை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தத்தீர்ப்பு அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.