விடுமுறைக்காலத்தில் ஷாப்பிங் மோசடிகள் தொடர்பில் மெட்டா எச்சரிக்கை
விடுமுறைக்காலத்தில் பொருள் வாங்குவோரைக் குறிவைத்து இடம்பெறும் மோசடித் திட்டங்களிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை அறிவித்துள்ளது சமூக ஊடகப் பெருநிறுவனமான மெட்டா.
கம்போடியா, மியன்மார், லாவோஸ், பிலிப்பீன்ஸ் ஆகிய தென்கிழக்காசிய (ஆசியான்) நாடுகளிலும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் (யுஏஇ) உள்ள மோசடி நிலையங்களுடன் தொடர்புடைய இரண்டு மில்லியன் கணக்குகளை நீக்கிவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டில் மட்டும் வியட்னாமில் 15,000, சிங்கப்பூரில் 9,000 மோசடி இணையத்தள முகவரிகளை அகற்றிவிட்டதாகவும் அது குறிப்பிட்டது.
ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனம், இணையப் பாதுகாப்பு நிறுவனமான கிராஃபிகாவுடன் கைகோத்துள்ளது.
கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டி, விடுமுறைக்கால அலங்காரப் பொருள் விற்பனை, போலியான சில்லறை விற்பனைப் பெறுகைச்சீட்டு (கூப்பன்) ஆகியவை தொடர்பில் கவனமாக இருக்கும்படி அது பயனர்களை அறிவுறுத்தியுள்ளது.
மோசடிப் பேர்வழிகள் தங்களைக் கண்டுபிடிக்க முடியாதபடி தங்களது வழிமுறைகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பர் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
பிரிட்டன், ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட ‘ஃபயர்’ எனும் மோசடிப் புலனாய்வுத் தகவல் பரிமாற்றத் திட்டத்தை உலகம் முழுமைக்கும் அது விரிவுபடுத்தியுள்ளது.