பணியில் இருந்து அடுத்து யார் விலகக்கூடும்? – கண்டுபிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு

பணியில் இருந்து அடுத்து யார் விலகக்கூடும் என்பதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை ஜப்பானில் தோக்கியோ நகரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நருஹிக்கோ ஷிராட்டோரி என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் வருகைப்பதிவு முதல் அவர்களது வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் முதலில் சேகரிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே வேலையில் இருந்து விலகிச்சென்றவர்களின் தரவுகளை ஆராயும் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி, ஊழியர்கள் மாறும் விகிதத்தைப் பிரதிநிதிக்கும் மாதிரியை நிறுவனத்துக்கு தயாரித்துக் கொடுக்கும்.
அந்தக் கருவிகளில் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களின் தரவுகளைப் புகுத்தும்போது அது யார் யார் வேலையில் இருந்து விலகக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றனர் என்ற தகவலைக் கணித்துக்கூறும்.
அவ்வாறு பெறப்படும் தகவல்களை வைத்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் வேலையில் இருந்து விலகாமல் இருப்பதை உறுதிசெய்ய முதலாளிகள் அவர்களுக்கு வேண்டிய ஆதரவு வழங்க முடியும் என ஷிராட்டோரி தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் புதிய பட்டதாரிகளில் பத்தில் ஒருவர் ஓர் ஆண்டுக்குள் வேலையில் இருந்து விலகிவிடுவதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
சுமார் 30 சதவீதமானோர் 3 ஆண்டுகளுக்குள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிடுவதாக தொழிலாளர் அமைச்சு கூறியது.