ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
ஆரோக்கியமே மகா பாக்கியம்’ என ஒரு கூற்று உள்ளது. நாம் எதை இழந்தாலும், நமது உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தால், அனைத்தையும் திரும்ப பெற்று விடலாம்.
ஆகையால், மனிதர்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான உடல் செயல்பாடுகள் ஆகியவை மிக அவசியம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியின் பங்கு மிக முக்கியமானது.
உடற்பயிற்சிகள், யோகாசனங்கள், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் செய்வதை நாம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
பலருக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யவோ, யோகாசனங்கள் செய்யவோ நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு நடைப்பயிற்சி ஏற்றதாக இருக்கும். அதுவும் காலை வேளையில் நடப்பது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது.
ஆரோக்கியமான உடலை பேண ஒருவர் எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு நேரம் நடக்க வெண்டும்? இந்த சந்தேகம் பலருக்கு இருக்கின்றது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
டாக்டர் கூறுவது என்ன?
காலையில் எழுந்து சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது கூட பலன் தரும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அது போதுமா? இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இதைப் பற்றி தெரிந்து கொள்ள, பிரபல உடற்பயிற்சி நிபுணர் டாக்டர் அனில் ஜெயினிடம் பேசினோம்.
அவர் நம்முடன் பகிர்ந்துள்ள கருத்துகளை இங்கே காணலாம்.
முற்றிலும் எந்த வித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதை விட, சிறிது தூரம் நடப்பது சிறந்ததுதான். ஆனால், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறிது தூரம் நடப்பது மட்டும் போதாது என்று மருத்துவர் கூறுகிறார். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செய்யப்படும் வழக்கமான உடற்பயிற்சி தசைகளை வலுப்படுத்தி, இதயத் துடிப்பை அதிகரித்து கலோரிகளை எரிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
காலை வெளையில் செய்யப்படும் சரியான நடைப்பயிற்சி எப்படி இருக்க வேண்டும்?
காலையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர் அனில் ஜெயின் கூறுகிறார். ‘இந்த நேரத்தில், வேகமாக நடக்க முயற்சி செய்ய வெண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் நடைகளுக்கு இடையில் அவ்வப்போது ஜாகிங் அல்லது ஓட்டப்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் கலோரிகளை எரிக்கும் திறனை அதிகரிக்கும்.’ என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இது மட்டுமின்றி, நடப்பவரின் உடற்தகுதி அளவைக் கருத்தில் கொண்டு, நடைப்பயிற்சியின் வேகத்தையும் நேரத்தையும் படிப்படியாக அதிகரிப்பதும் மிகவும் முக்கியம் ஆகும். துவக்கத்தில் 20 நிமிடங்களில் தொடங்கி படிப்படியாக 30 நிமிடங்களாக நடைப்பயிற்சியின் நேரத்தை அதிகரிப்பது சிறந்தது.
காலை நடைப்பயிற்சி மட்டும் போதுமா?
உடல் ஆரோக்கியத்தை பராமரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் மீளும் தன்மையை மேம்படுத்த காலை நடைப்பயிற்சி மட்டும் போதாது என்று மருத்துவர் அனில் ஜெயின் அறிவுறுத்துகிறார். வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை (High Intensity Workout) இதனுடன் சேர்ப்பது நன்மை பயக்கும். இந்த உடற்பயிற்சிகள் நமது தசைகளை வலுப்படுத்துவதோடு, எலும்புகளையும் பலப்படுத்தும்.
காலை வேளை நடைப்பயிற்சி
காலையில் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயமாக நன்மை பயக்கும். ஆனால் அது மட்டும் போதாது. ஒரு சீரான உடற்பயிற்சி வழக்கத்தில் வாரத்தில் சில நாட்கள் 30 நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி, அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள், யோகாசனம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையும் மிக அவசியமாகும். எனினும், உங்களுக்கு எலும்பு, தசைகள் தொடர்பான பிரச்சனைகளோ, அல்லது பிற பிரச்சனைகளோ இருந்தால், உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.