தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட தீபத்திருவிழா
அயோத்தி ராமர் கோயிலில் முதல் தீபாவளியை கொண்டாட பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ராமர் கோயில் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் தனது முதல் தீபாவளியை வரும் 31ம் தேதி கொண்டாட உள்ளது. இதற்காக கோயில் அறக்கட்டளை நிர்வாகமும், உத்தர பிரதேச அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.
ஒவ்வொரு தீபாவளி அன்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தீப உற்சவத்தை நடத்துவது வழக்கம். அவர், அயோத்தி ராமர் கோயிலை ஒட்டிய சரயு நதிக்கரையில் 8வது தீப உற்சவத்தை கொண்டாட உள்ளார்.
அப்போ 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகஉத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. தீப உற்சவத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தீப உற்சவத்தில் பயன்படுத்தப்படும் விளக்குகள் நீண்ட நேரம் எரியும் வகையிலும், புகை கறை படியாத வகையிலும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு மெழுகு பயன்படுத்தப்பட்டு கார்பன் உமிழ்வும் குறைக்கப்பட உள்ளது.
ராமர் கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட உள்ளது. தீபாவளியையொட்டி நாளை முதல் நவம்பர் 1 வரை நள்ளிரவு வரை ராமர் கோயில் திறந்திருக்கும்.