தமிழக சட்டப் பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு!
புத்தாண்டில் தமிழக சட்டசபை கூடிய முதல் நாளிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்துள்ளமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கீதத்தை முதலில் இசைக்காமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆளுநர் வெளிநடப்பு செய்தார் எனக் கூறப்படுகின்றது.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை ஆளுநர் ஆர்.என். ரவி வருகைதந்தார்.
முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறியும் அதைப் பின்பற்றாததில் வருத்தம் இருப்பதாக தெரிவித்துவிட்டு, பேரவையைவிட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை மரபுப்படி, ஆளுநர் உரைக்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்தும், உரைக்கு பின்பு தேசிய கீதமும் இசைக்கப்படுவதே வழக்கம் என்று அப்பாவு தெரிவித்தார்.
அத்துடன், ஆளுநர் அரசியலமைப்பை தொடர்ந்து மீறுவதாக முதல்வர் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை அவர் படித்ததாக அவைக் குறிப்பில் பதிவு செய்யும் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியதாக அவை தலைவர் அறிவித்தார்.
அதேவேளை, தான் ஏன் வெளிநடப்பு செய்தார் என்பது தொடர்பில் ஆளுநர் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய கீதம் புறக்கணிப்பு உட்பட அதில் 13 விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.





