ரஷ்ய அதிகாரி மரணம் – அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
ரஷ்ய ராணுவ அதிகாரி இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட சம்பவத்தில் தங்களுக்கு பங்கில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆனால் அவரின் கொடுஞ்செயல்களை அமெரிக்கா கண்டித்தது. தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மேத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை லெப்டினென்ட் ஜெனரல் கில்லோரி மீறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிகாரி உத்தரவிட்டதாக மில்லர் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா, ராணுவ மூத்த அதிகாரியின் கொலைச்சம்பவத்தில் தொடர்பில்லை என்று சொல்வதை ரஷ்ய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் மரியா ஸக்கரோவா நிராகரித்திருக்கிறார்.
அமெரிக்காதான் கீவ் ஆட்சியை உருவாக்கி ஆதரவளித்தது என்றும் பணம் கொடுத்து உக்ரேனுக்கு ஆயுதங்களை முடிவின்றி அனுப்புவதும் அதுவே என்றும் அவர் கூறினார்.
உக்ரேனிய அரசாங்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையையோ சதித்திட்டத்தையோ ஒருமுறை கூட அமெரிக்கா கண்டிக்கவில்லை என்பதைத் திருவாட்டி ஸக்கரோவா சுட்டினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.