ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 36 பேர் பலி, 19 பேர் படுகாயம்!
ஜம்மு & காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 25 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. காயங்களுடன் மீட்கப்பட்ட 19 பேர் கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும் பந்தயத்தில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர்ன் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். இதனிடையே, மீட்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.