தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு ஹீரோ.. 68 ஆண்டு கால வரலாற்றை புரட்டிப்போட்ட அல்லு அர்ஜுன்
68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ என்ற பெறுமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்த அல்லு அரவிந்தின் மகன் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் அல்லு அர்ஜுனும் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.
அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் 1985ஆம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படம்.அதற்கு அடுத்ததாக ஸ்வாதி முத்யம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பிறகு சென்னையில் படிப்பை முடித்த அவர் 2003ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் லீடு ஆக்டராக அறிமுகமானார். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அல்லு அர்ஜுனின் அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து அவர் ஆர்யா, ஹேப்பி, பருகு, ஆர்யா 2 என பல படங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை ஹிட்டடிக்க தெலுங்கில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை அடைந்தார். அவரது நடனத்துக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். முகத்தில் எந்தவித எஃபர்ட்டையும் காண்பிக்காமல் கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும்கூட அதை அசால்ட்டாக போடுபவர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜுனை இந்தியா முழுவதும் கொண்டுபோய் சேர்த்தது புஷ்பா படம். சுகுமார் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டு பான் இந்தியா படமாக வெளியானது. படமும் மெகா ஹிட்டடித்தது. 500 கோடி ரூபாய்வரை படம் வசூலித்ததாக கூறப்பட்டது.
அந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் செய்த மேனரிஸங்கள் அனைத்துமே வெகு பிரபலமடைந்தன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்கூட அல்லு அர்ஜுனின் மேனரிஸத்தை செய்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தனக்கு விருது அறிவிக்கப்பட்டவுடன் அல்லு அர்ஜுன் ஆனந்த கண்ணீர் விட்டார்.
தெலுங்கு திரையுலகம் சமீபகாலமாக வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டுவருகிறது. ஆனாலும் 68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.