இலங்கையில் மீண்டும் ஒரு இனவழிப்பா?
அண்மையில் எழுதிய கட்டுரையில் இலங்கையில் மீண்டும் இன அழிப்புக்கான முஸ்தீப்புக்கள் இடம் பெறுகின்றன, என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். எனது கருத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்திய புலனாய்வுத்துறையினர் இலங்கையில் இனக்கலவரம் ஒன்று ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளனர். அவர்களின் அறிக்கையின்படி முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரமும் ஏனைய பௌத்த ஆக்கிரமிப்பு கொள்கையும் இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தோற்று விக்கலாம் என்பது அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிரக்கும் சிவப்பு எச்சரிக்கை.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலிக்கடா ஆக்கவேண்டாம் என தாழ்மடன் கேட்டுக்கொள்கிறேன்” என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் மக்கள் பிரதி நிதிகளை விநயமாக கேட்டடுள்ளார்.
. இது ஒரு பறமிருக்க யாழ்ப்பாணத்துக்கு கடந்த (23.8.2023) ஆம் திகதி விஜயம் செய்திருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளை சந்தித்து உரையாடியபோது ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவ அமைப்பான பாரதியஜனத்தா கட்சியின் அழுத்தம் அல்லது பின்னணி உண்டா என்று வினவியுள்ளார். இதன் அர்த்தம் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது. பாரதிய ஜனத்தாவின் இந்துத்துவத்தின் தூண்தலின் பேரிலையே இந்து அமைப்பினர் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர் நினைத்திருக்கலாம் அன்றி சிங்கள தரப்பினர் யாரோ சொல்லி அறிந்துகொள்ள கேட்டிருக்கலாம்.
குருந்துர்ர் மலை பிரச்சனையை ஒரு பௌத்தமத அழிப்பாக ஆக்கிரமிப்பாக பிரச்சாரம் செய்து தமிழர்களால் பௌத்த பண்பாட்டு மையங்களும் தொன்மங்களும் அழிக்கப்படுகிறதென்ற மதவாத கொடூரத்தை நாட்டில் உருவாக்க ஒரு தரப்பினம் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள் என்பது பௌத்த அடிப்படை வாதம் பேசிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் துவேசமான வார்த்தைககை;கொண்டு புரிநு;து கொள்ள முடிகிறது.
மதவாதமும் இனவாதமும் இரு சமூகங்களுக்கிடையில் மிக எளிமையாக சர்ச்சையை உருவாக்கிவிடும் என்பதற்கு இலங்கையிலும் உலகத்திலும் பல உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும். இலங்கையில் எழுந்துள்ள இந்த சர்ச்சையில் இந்திய எதிர்ப்பு வாதத்தையும் மறைகரமொன்று சீண்டிக்கொண்டிருக்கிறது என்பதற்கு அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியிருக்கும் சந்தேகம் ஒரு மூலமாக கருதப்படலாம். குருந்தூர் மலை விவகாரத்தை இந்திய எதிர்ப்போடு தொடர்புபடுத்தி குளிர்காய நினைக்கும் ஒரு குழுவினரின் மறை முகமான செயற்பாட்டுக்கு நல்ல தொரு உதாரணம். நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்ட இயக்கம் என்ற வகையில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் பின்வருமாறு முன்வைக்கப்பட்டுவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை 21 ஆம் திகதி இந்திய விஜயத்தின்போது ஒட்டு மொத்த இலங்கை மக்களின் தலைவிதியையும் நாட்டின் நிலத்தையும் வளங்களையும் தாரைவார்த்து கொடுத்து வலுசக்தி இறையாண்மையை காட்டிக்கொடுத்து பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.
அதன்பிரகாரம் திருகோணமலையில் இந்திய பொருளாதார வலயத்தை நிறுவுதல், இந்திய மின்சக்தி கட்டமைப்பை மன்னாரோடு இணைப்பது, இந்தியாவை இலங்கையை தரைவழியாக இணைப்பது, எண்ணை விநியோகத்தை ஏற்படுத்துவது, சம்பூர் சூரிய சக்தி மையத்தை அமைத்தல் என பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது இதை தேசிய வாதிகள் எதிர்க்கவேண்டுமென நாடு பூராவும் மேற்படி அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய சொத்துக்களை வளங்களை அன்னிய நாட்டுக்கு விற்பதை எத்pர்ப்பது தேசப்பற்றாக கருதினாலும்,
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தவேண்டுமென்பதில் இந்தியாவின் அழுத்தம் அதிகமாக காணப்படுகிற நிலையில் ஒரு மாயத்தனத்தை உருவாக்கி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் மறைமுகமான எதிர்ப்புக்கொண்டவர்களின் இன்னொரு யுக்தியாகவே இந்த இந்திய எதிர்ப்பு வாதம் தலை நீட்டத்தொடங்கியுள்ளது என்று கருதமுடியும். அதற்காகவே இந்த குருந்தூர் மலை விவகாரம் தூண்டிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை தமிழ் தரப்பினர் அமெரிக்க தூதரிடம் எடுத்துரைத்ததாக அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தொல்பொருள் என்ற பெயரில் தூண்டிவிடப்படும் இனவாத கெடுபிடிகள் அண்மைக்காலத்தில் மிக தீவிரமாக்கப்பட்ட வருகிற தென்பதற்கு கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு மாதவனைப்பகுதியில் சர்வமததலைவர்களும் ஊடகவியலாளர்களும் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னணியில் பௌத்த மதகுரு தலைமையிலான சட்டவிரோத காணி அபகரிப்பாளர்கள் பிரதான சூத்திரதாரிகளாக இருந்திருக்கிறார்கள்.
இதே போன்றே திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றுக்கள் தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடமென சுவீகரிக்கப்பட்டிருப்பதும், நிலாவெளி பிரதான வீதி இலுப்பைக்குளத்தில் தனியார்காணியொன்றை கையகப்படுத்தி விகாரை அமைக்க பௌத்த துறவியொருவர் தீவிரம் காட்டுவதும், யாழ் சுழிபுரம் முருகன் ஆலயத்திலுள்ள அரசமரம் தொல்லியல் பெருமை கொண்டதென பிரகடனப்படுத்தப்பட்டிருப்புதும், என வட கிழக்கிலுள்ளு ஏராளமான இடங்கள் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் பாரம்பரிய அடையாள சின்னங்கள் பௌத்த தொன்மங்களாக மாற்ற நினைப்பது தேசத்தின் மத இணக்கப்பாடுகளுக்கு சவால் விடும் சம்பவங்களாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஏலவே இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் ஏற்படுத்தப்பட்ட கலவரங்கள் இனத்துவமோசம் கொண்டவையாகவும், மத அடிப்படையான கலவரங்களாக உருவாக்கப்பட்டவையகவும் இதன் பின்னணியில் கோரமான அரசியல் தலைவர்களும் மதவாதிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம் . குறிப்பாக நாட்டில் உருவாக்கப்பட்ட கலவரங்கள் அனைத்துமே மேற்போந்த பின்னணி கொண்டதாகவே இருந்துள்ளது.
1870 ஆம் ஆண்டு மருதானை சிங்கள முஸ்லீம் கலவரம், 1883 ல் கொட்டாஞ்சேனை மதக்கலவரம் , 1915 ன் கம்பளை முஸ்லீம் சிங்கள மதக்கலவரம், 1939 நாவலப்பிட்டி கலவரம் ,1956 ல் கிழக்கில் 150 தமிழர்கள் கொல்லப்பட்ட கலவரம், 1958 தமிழ் சிங்கள இனக்கலவரம், 1977 போர் என்றால் போர் சமாதானமென்றால் சமாதானம் என உருவாக்கப்பட்;ட இனக்கலவரம், 1981 யாழ் நூலகம் எரிப்பு, 1983 ஆடிக்கலவரம், 2018 ஆம் ஆண்டு அம்பாறை பள்ளிவாசல் தாக்குதல் இதேயாண்டு தெல்தெனிய திகன தாக்கதல். குருநாகல் தாக்குதல்கள் என இனவன்முறையில் அரசியல் குளிர் காய்ந்தவர்களால் இந்த தேசம் பட்ட அவலங்களை கற்றுக்கொண்ட பாடங்களை இன்னும் மறந்துவிட முடியவல்லை.. இவ்வாறனதொரு சூழ்நிலையில் மீண்டும் இனக்கலவரம் ஒன்று உருவாகுவதற்கான கொதி நிலை உருவாகிவருகிறது என எச்சித்திருப்பது நாட்டுக்ககு நல்லதொரு சகுனமாக தெரியவில்லை.
13 ஆவது திருத்தம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள், இந்தியாவின் பொருளாதார மற்றும் பிராந்திய தொடர்புகளை ஏற்க விரும்பாதவர்கள். வட கிழக்கின் பாரம் பரியங்களை உடைத்தெறியவேண்டு மென்ற குரோத எண்ணங்களோடு செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள், அதிலும் குறிப்பாக மாவட்டத்துக்கு மாவட்டம் பிரதேசத்துக்கு பிரதேசம் பௌத்த பேராதிக்கத்தை நிலை நிறுத்தவேண்டுமென்ற கொள்கை கொண்ட தேரர்கள் வடகிழக்கு உட்பட தென்னிலங்கையில் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறனதொரு நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற விவகாரம் தூக்கி எறியப்படுவதற்கான சாத்தியமே அதிகமாக காணப்படுகிறது. இதன் தோற்றுவாயாகவே இனக்கலவரத்துக்கான தூபம் இடப்படுறதென்றவிடயம் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட எல்லாச்சந்தர்ப்பங்களைப்போலவே நாட்டின் போக்கு இனவாதமாக திருப்பப்பட்டுக்கொண்டிருக்கிற தென்பதை அண்மையில் நடந்த பல்வேறு சந்தர்ப்பங்கள் துல்லியமாகவே படம் பிடித்துக்காட்டுகிறது.
திருமலை நவம்