வெல்லாவெளி மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்விற்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டது!
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது வெல்லாவெளி பொலிசாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வானது ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி இந்நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
மாவீரர் தின வாரத்தில் அதனுடன் தொடர்புபட்ட எந்த நிகழ்வுகளையும் செய்ய முடியாது என்ற விதத்தில் இத்தடையுத்தரவு பெறப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் இத்தடையுத்தரவு தொடர்பிலான விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையால் நீதிமன்றத்திற்கு சமூகமளித்து தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைக்குமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. நீதிமன்றத்தினை நாடி இத்தடையுத்தரவினை நீக்கி நிகழ்வினை குறித்த தினத்திலேயே முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவத்தனர்.
இந்த நிலையில் திடீரென பொலிஸார் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் நிகழ்வுக்காக வைத்திருந்த நிகழ்வு தொடர்பான பதாகைகளை அகற்றியதுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸையும், உபதலைவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
மேலும் வெல்லாவெளியில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அலுவலகத்தினை சூழ பெருமளவான பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வுக்கு வந்தவர்களிடம் வாக்குமூலம் எடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.