12 வருட காதலரை கரம்பிடித்த நியூசிலாந்தின் முன்னால் பிரதமர்..
நியூஸிலாந்து முன்னாள் பிரதமரான ஜெஸிந்தா ஆர்டெர்ன் தனது நீண்ட கால காதலர் கிளார்க் கெய்போர்டை இன்று திருமணம் செய்து கொண்டார்.
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன். இவர் கடந்த 2017 முதல் 2023 வரை நியூஸிலாந்து நாட்டின் 40வது பிரதமராக பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்தபோதே, பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
ஜெஸிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்கும்போதே கிளார்க் கெய்போர்டுடன் காதலில் இருந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2012ல் ஆக்லாந்தில் மெட்ரோ உணவக விருது நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்தனர். அதன் பிறகு அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர்.
கடந்த 2019 மே மாதத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமணத்தை ஒத்தி வைத்தனர்.
ஜெஸிந்தா ஆர்டெர்னுக்கு தற்போது 43 வயது. கிளார்க் கெய்போர்டுக்கு 47 வயது. இந்நிலையில் நியூசிலாந்தின் வெலிங்டனில் இருந்து 310 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு தீவின் கிழக்கு கடற்கரையில் கிராகி ரேஞ்சில் உள்ள ஹாக்ஸ் விரிகுடாவில் இன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நெவ் என்ற ஐந்து வயது மகள் உள்ளார்.