வெலே சுதாவுக்கு சுகவீனம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழுப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘வெலேசுதா’ என அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்தகுமாரவை உடனடியாக புஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை செய்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
அவர் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதா என பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெலேசுதா என அழைக்கப்படும் சமந்தகுமார, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினர் வசந்தி வசுந்தரா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வெலசுதாவுக்கு உடல் நலக்குறைவால் இருப்பதால் நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் இன்று ஏற்பட்டுள்ளதாக புஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகர் தொலைநகல் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டே மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் சாட்சி விசாரணையை ஜனவரி 24 ஆம் திகதிக்கு அழைப்பதாக நீதிபதி உத்தரவிடப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் வருமானத்தில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான காணி மற்றும் வீடுகளை கையகப்படுத்தி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இழைத்ததாக குற்றம் சுமத்தி வெலேசுதா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.