சிங்கப்பூர் – இந்திய வம்சாவளி நபருக்கு இரு வாரங்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் : பின்னணி
சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை ஒன்று உருவாகி, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சூழலில், மாஸ்கை அகற்றி தன் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் முகத்துக்கு நேரே இருமிய இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு, நேற்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்செல்வம் ராமையா என்பவர் சிங்கப்பூரிலுள்ள நிறுவனம் ஒன்றில் துப்புறவுப் பணியாளராக பணியாற்றிவந்துள்ளார்.2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, அலுவலகத்துக்கு வரும்போது, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தன் மேலாளர் ஒருவரிடம் கூறியுள்ளார் ராமையா.உடனே கோவிட் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அந்த மேலாளர் கூற, உடனடி கோவிட் பரிசோதனையில் ராமையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கும் தகவலளிக்கப்பட்டுள்ளது.
நேரே வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டும், ராமையா வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அவரும் கார் சாரதி ஒருவரும் அலுவலகத்திற்குள் நுழைய, அதைக் கண்ட மேற்பார்வையாளர் ஒருவர் ராமையாவின் அருகில் நிற்கவேண்டாம் என அந்த சாரதியை எச்சரித்துள்ளார்.அத்துடன் அலுவலகத்தை விட்டு போங்கள் என்று சொல்லி, மிதிப்பது போல் காலைத் தூக்கி காட்டியிருக்கிறார் அந்த மேற்பார்வையாளர்.
உடனே ராமையா மாஸ்கை அகற்றிவிட்டு, ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அந்த அலுவலகத்துக்குள் வேண்டுமென்றே இருமிவிட்டு வெளியே சென்றுள்ளார்.அத்துடன், வெளியே செல்லும்போது 56 வயது பெண்மணி ஒருவரை நோக்கியும் இருமிவிட்டுச் சென்றுள்ளார் ராமையா.உடனே மேலாளர் பொலிஸில் தகவலளித்துள்ளார். பொலிஸ் விசாரணையில், தான் தமாஷுக்காக அப்படி செய்ததாக ராமையா கூறியுள்ளார்.
இது விளையாடும் விடயம் அல்ல என்று கூறியுள்ள அரசு தரப்பு வழக்கறிஞர், ராமையாவுக்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.நீதிபதி, ராமையாவுக்கு இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதே வழக்கு விசாரணை கோவிட் காலகட்டத்தில் நடந்திருக்குமானால், ராமையாவுக்கு ஆறு மாதங்கள் சிறையும், 10,000 சிங்கப்பூர் டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.