Threads செயலி – அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மார்க்
டுவிட்டர் தளத்திற்கு போட்டியாக Threads என்ற சமூக வலைதளம் கடந்த ஜூலை மாதம் மெட்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான செயலியாக மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் இதன் வெப் வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்வோம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த வாரம் திரெட் செயலியின் வெப் வெர்ஷன் வெளியாகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இன்ஸ்டாகிராம்-ன் தலைவர் ஆடம், கடந்த சில வாரங்களாக Threads செயலியின் வெப் வெர்ஷனை நிறுவனத்திற்குள்ளே பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் Threads செயலியில் ஒரு சில வசதிகள் மட்டுமே இருந்த நிலையில், இதில் தொடர்ந்து பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது வெப் வெர்ஷனும் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியில் ஒரு வாரத்திற்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இணைந்தனர். குறுகிய காலத்தில் அதிக பயனர்களைப் பெற்ற சமூக வலைதளம் என்ற சாதனையை திரெட்ஸ் படைத்தது.
ஆனால் இந்த செயலியில் புதுமையாகவும், தனித்துவமாகவும் எவ்வித வசதிகளும் இல்லாததால் பயனர்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தினர். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நிலவரப்படி அவர்களின் மாதாந்திர பயணங்களில் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்களை இழந்து வெறும் 10 மில்லியன் பயனர்கள் மட்டுமே தற்போது Threads செயலியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
ஆனால் இதன் போட்டியாளரான ட்விட்டர் தளத்தில் சுமார் 360 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திரப் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் 235 மில்லியன் தினசரி பயனர்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.